தகவலறியும் உரிமை

ஆயிரம் ருபா வாடகையில் வாழும் எம்.பி.க்கள்!

சம்பிகா முதுகுட

ரூபாயின் மதிப்பு வேகமாகச் சரிந்து வரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாடு இல்லாமல் உயர்வடைந்தன. மேலும், இந்தப் பணவீக்க அழுத்தத்தை எதிர்நோக்கும் வகையில், சில தனியார் ஊழியர்களின் மற்றும் அரச ஊழியர்களின் ஊதியம் ஒரு ரூபாய் கூட உயர்த்தப்படாமல் தேக்கமடைந்தது. இதன் விளைவாக, ஏற்கனவே மாதத்திற்கு 25000 ரூபாயில் பிழைப்புக்கு போராடும் தொழிலாளர்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவுகள் 75,000 ரூபாயாக உயர்வடைந்தது. பல சிறிய அளவிலான வணிகங்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளதுடன் பல்வேறு துறைகளிலும் தாக்கம் உணரப்பட்டது. மேலும் முக்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூடத் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்று வேறு இடங்களுக்கு இடம்பெயர முடிவு செய்தனர். சமுதாயத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய, குறைந்த ஊதியம் பெறுபவர்கள், மீள முடியாத சூழ்நிலையில் சிக்கிக் கொண்டனர். கட்டுமானத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது, கட்டிடப் பொருள்களின் விலை ஏற்றம் குறித்த துறையின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. மேலும் கட்டுமான துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் தினசரி வருமானத்தைத் திடீரென இழக்கும் நிலைக்கு ஆளாகினர். இது நெருக்கடியை மேலும் மோசமாக்கியது. 

இந்தச் சவால்களுக்கு மத்தியில், வீட்டு உரிமையாளர்கள் ஒருதலைப்பட்சமாக வீட்டு வாடகையை உயர்த்தியுள்ளனர். தொலைதூர பகுதிகளில் உள்ள சாதாரண குடியிருப்புகள் கூடப் பதினைந்தாயிரம் ரூபாய்க்கு மேல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. பரபரப்பான நகர மையமான கொழும்பில், மாத வாடகை தொகை  30,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. தண்ணீர் வசதியுடன் கூடிய அடிப்படை இரண்டு அறைகள் கொண்ட தங்குமிடத்திற்கு கூட அதிகப்படியான வாடகை தொகை செலுத்த வேண்டி காணப்படுவதால் மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். கிராமப்புறக் குறைபாடுகளைக் கடந்து புலமைப்பரிசில் அல்லது பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பிறகும் கூட, நகரக் கல்வியைப் பெறுவதற்கு நகர்ப்புறத்திற்கு வந்த மாணவர்களின் வாழ்க்கை தரம் அதே போன்றே கடினமானதாகவே உள்ளது. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, மஹபொல உதவித்தொகையுடன் பல்கலைக்கழகத்தில் நான்கு வருடங்கள் கல்வி கற்று அதன் மூலம் வேலைவாய்ப்பைப் பெற்ற போதிலும் அந்த வேலைக்கான சம்பளம்  மிகச் சிறிய தொகையே ஆகும். 

இதற்கு நேர்மாறாக, கொழும்பு நகரின் பாதுகாப்பான எல்லைகளில் ஆடம்பரமான வீடுகளுக்கான அணுகலைப் பெறும் அதிர்ஷ்டசாலி தரப்பினர்கள் சிலர் உள்ளனர், அவர்களுக்கு   1000 ரூபாய் மட்டுமே மாதாந்த வாடகை கட்டணமாக அறவிடப்படுகின்றது. இந்தச் சலுகை பெற்ற குடியிருப்பாளர்கள் மின்வெட்டுகளின் போதும் தடையின்றி தண்ணீர் மற்றும் மின்சார விநியோகத்தை அனுபவிக்கின்றனர். அதற்கு மேல், அவர்கள் தொலைபேசி வசதிகள், மேம்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றைப் பெறுகிறார்கள். மேலும் வீடு பராமரிப்பு மற்றும் கழிவு மேலாண்மைக்கான செலவுகளை அரசே ஏற்கிறது. இத்தகைய அப்பட்டமான ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்துகொண்டே செல்கின்றன.  பொது மக்கள் விண்ணை தொடும் வீட்டு வாடகையினால் அவஸ்தைப்படுகின்றனர். மேலும் தங்களுடைய வருமானத்தில் கணிசமான பகுதியைத் தங்குமிடத்திற்கு ஒதுக்க வேண்டிய நிலை, மற்றும் அரசாங்க உதவியின்றி வாழ்க்கையைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். 

இது தொடர்பான விரிவான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், நாம்  சமீபத்தில் பாராளுமன்றத்தில் தகவல் கோரிக்கையை முன்வைத்தோம். அதனைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தின் தகவல் அதிகாரி டிக்கிரி கே. ஜயதிலகவிடமிருந்து பெறப்பட்ட பதிலின் அடிப்படையில் இந்தக் கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.

இந்தக் குறிப்பிட்ட தரப்பினர் மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுதியில் வசிக்கின்றனர். தற்போதுள்ள 120 உத்தியோகபூர்வ இல்லங்களில் 111 வீடுகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் 1000 ரூபா வீதத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒன்பது வீடுகள் மாதிவெல வீட்டுத் தொகுதிக்குச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. பொது மேடைகளில் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்தக் குடியிருப்பு வீட்டுத் தொகுதியில்  கணிசமான செல்வச் செழிப்புடன் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரச ஊழியர்கள் குடியிருப்பு தொகுதியொன்றை வாடகைக்கு பெற்றுக்கொள்ளும்போது அவர்களது சம்பளத்தில் 10% வீட்டு வாடகையாகச் செலுத்த வேண்டும். இந்தப் பின்னணியில்,  அரசு ஊழியர்களாக இருக்கும்  பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த தொகையைப் பங்களிக்க வேண்டாமா என்று ஒருவர் கேள்வி எழுப்ப முடியும். ஆகவே அதே கொள்கையைக் கருத்தில்கொண்டு, 54,285 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தில்  பாராளுமன்ற உறுப்பினர் குறைந்தபட்சம் 5428.50 ரூபாயை வீட்டு வாடகையாகச் செலுத்த வேண்டும் அல்லவா?   

1994 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் குடியிருப்பு அடுக்குமாடி வளாகம் 2020 ஆம் ஆண்டில் புதுப்பித்தலுக்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டின்  உட்புறம் மற்றும் வெளிப்புற சுவர்களை மீண்டும் வர்ணப்பூச்சு செய்தல், அலுமாரிகளை பழுதுபார்த்தல் போன்ற முக்கியமான மேம்பாடுகளில் இந்தப் புதுப்பித்தல் நடவடிக்கை கவனம் செலுத்தியுள்ளது. மேலும், கதவுகள், ஜன்னல்கள் மற்றும் கூரைகளில் விரிவான பழுதுபார்ப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் நீர் குழாய் அமைப்பு மற்றும் குளியலறையில் காணப்படும் சிக்கல்களைத் தீர்ப்பது, அத்துடன் மின் அமைப்பில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்தல் போன்ற விடயங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் புனரமைப்புக்கான மொத்த செலவு ரூபா 3,625,450.08 ஆகும்.   

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியைப் பெற்றுக்கொள்வதற்கான தகுதியைப் பெறுவதற்கு, விண்ணப்பதாரர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க வேண்டும் என்பதே முதன்மையான தேவையாகும். மேலும், பா.உ, அவர்களது மனைவி அல்லது சார்ந்திருக்கும் குழந்தைகள், பாராளுமன்றத்திலிருந்து 40 கிலோமீட்டர் (25 மைல்) சுற்றளவில் குடியிருப்பு வீடு வைத்திருக்காமல் இருப்பதும், குறித்த பரப்பிற்கு உட்பட்ட பிரதேசத்திற்குள் தனக்கு சொந்தமான வீடு   வாடகைக்கு அல்லது  குத்தகைக்கு விடப்படாமல் இருப்பதும் அவசியமாகும். மேலும், விண்ணப்பதாரர் ஏற்கனவே அரச அடுக்குமாடி குடியிருப்பு அல்லது வீடு பெற்றுக்கொள்ளாமல் இருத்தல் வேண்டும். இந்த அளவுகோல்களை பூர்த்தி செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பிட்ட பரப்பிற்குள்  வீட்டுரிமை  இல்லை என்று உறுதிமொழிப் பத்திரத்தைச் சமர்ப்பித்து, உத்தியோகபூர்வ வீட்டு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டு வளாகத்திலிருந்து அதிகாரபூர்வ வீட்டைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தச் செயல்முறையானது, தகுதியான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே  குறிப்பிட்ட வளாகத்திற்குள் வழங்கப்படும் வீட்டு வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை உறுதி செய்கிறது.  

ஒரு பாராளுமன்ற உறுப்பினர்  வழக்கமான சம்பளத்துடன் பல்வேறு கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு 2,500 ரூபாயும், நாடாளுமன்றம் அல்லாத நாட்களில் குழுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக நாளொன்றுக்கு 2,500 ரூபாயும் கூட்டங்களுக்குக் கலந்துகொள்வதற்கான கொடுப்பனவாகப் பெற்றுக்கொள்கின்றனர். ஜூன் 2023க்கு மட்டும் 11 நாட்கள் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன் குறித்த மாதத்தில் மட்டும் அவர்கள் 27,500 ரூபாய் கொடுப்பனவாகப்  பெற்றுக்கொள்வர். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்திர அலுவலக கொடுப்பனவாக  1 இலட்சம் ரூபாய் வழங்கப்படுகின்றது. மேலும், ஓட்டுநர் கொடுப்பனவாக 3,500 ரூபாய் மற்றும் பொழுதுபோக்கு கொடுப்பனவு 1,000 ரூபாயையும் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் மாவட்டத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையிலான தூரத்தின் அடிப்படையில் எரிபொருள் கொடுப்பனவையும், தொலைபேசி செலவுகளுக்காக 50,000 ரூபா கொடுப்பனவையும் பெறுகிறார்கள். அலுவலகத்திற்கு வருகை தரும் நான்கு தனியார் ஊழியர்களுக்குத் தலா ரூ.2,500 வீதம் ரூ.10,000 மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் வருடாந்தம் 350,000 ரூபா பெறுமதியான இலவச அஞ்சல் வசதிகளை அனுபவிக்கின்றனர் (ஒரு காலாண்டிற்கு 87,500 ரூபாய்) மற்றும் பாராளுமன்ற உணவகத்தில் மானிய விலையில் சிறந்த உணவு வழங்கப்படுகின்றது. அவர்களுக்குத் தீர்வையற்ற  வாகனங்கள் வழங்கப்படுகின்றன. குடும்ப உறுப்பினர்களை ஊழியர்களாகச் சேர்த்துக்கொள்ள முடியும், உயர் ஊழியர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவுகள், வாகனங்கள், அமைச்சரவை பதவி உயர்வுகள்வரை  சம்பளம் கிடைக்கும். 

இலங்கையில் ஐந்து வருட சேவையின் பின்னர் ஓய்வூதியம் பெறக்கூடிய ஒரே வேலை பாராளுமன்ற உறுப்பினர் பதவியாகும். விபத்து அல்லது தீவிரவாத செயல்களால் பாராளுமன்ற உறுப்பினரின் மரணம் ஏற்பட்டால், அவர்களது குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மொத்த சம்பளம் ரூ.4,16,852 ஆகும். அனைத்து கழிவுகளுக்கும் பிறகு அவர்கள் ரூ.322658 சம்பளம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுதி தொகுதியைப் பராமரிப்பதற்கு அதிக செலவு செய்ய வேண்டும் என்பதை ஒப்புக்கொண்ட பாராளுமன்ற வீடு தொடர்பான குழு அதற்குத் தீர்வாக அந்த நிலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத் தொகுதி கட்டப்பட வேண்டும் என்பதை முன்வைக்கிறது. ஒரு உத்தியோகபூர்வ வீட்டு குடியிருப்புக்கு அவர்களிடம் வசூலிக்கப்படும் மாதாந்த கட்டணத்தை அதிகரிப்பது மேல்குறிப்பிட்ட தீர்வைவிட மிகச் சிறந்ததல்லவா ? மாதிவெல போன்ற புறநகர் பகுதியில் காணப்படும்  குடியிருப்புகளுக்கு இதனைவிட அதிக வாடகை தொகை வசூலிக்க முடியாதா? 25,000 சம்பளம் வாங்கும் சிறு தொழிலாளி கூடத் தனது சம்பளத்தில் பாதியை வாடகை வீட்டிற்கு  செலவழிக்கும் பின்னணியில் ஆதரவற்ற தொழிலாளியின் சம்பளத்திற்கு வரி விதிப்பதை விட, பல சலுகைகளை அனுபவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தகுந்த வாடகை தொகையை வசூலிப்பது மனிதாபிமானம் இல்லையா? பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்குக் கிடைக்கும் சலுகைகளுக்கு ஏற்ப மக்கள் சேவையை மேற்கொள்கிறார்களா என்பது சந்தேகமே. மறுபுறம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வளவு சலுகைகள் வழங்குவது இலங்கை போன்ற ஏழை நாட்டிற்கு பொருந்துமா என்பது ஆராயப்பட வேண்டிய விடயம். இதுபோன்ற காரணங்களால் தான் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தற்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts