கொரோனா சுமை! மூடப்படும் கோழிப் பண்ணைகள்!
யூ.எல். மப்றூக்
முட்டையிடும் சுமார் 09 ஆயிரம் கோழிகள் வளர்க்கப்பட்ட மிகப்பெரிய 6 கோழிக் கூடுகளும் இன்று வெறுமையாக உள்ளன. நான்கு வருடங்களாக இந்த கோழிப்பண்ணையை நடத்தி வந்த எஸ்.எல். நசீம், கடந்த பெப்ரவரி மாதம் இதை இழுத்து மூடிவிட்டதாகக் கூறுகின்றார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஸ்ரப் நகரிலுள்ள தமது சொந்தக் காணியில் மருமகனின் பொருளாதார உதவியுடன் அந்தக் கோழிப் பண்ணையினை அவர்கள் ஆரம்பித்திருந்தனர். மிக நவீன முறையிலான ஒரு கூட்டை அமைப்பதற்கு மட்டும் 37 லட்சம் ரூபா தமக்கு செலவானதாக நசீம் தெரிவிக்கிறார். “அந்தக் கோழிப்பண்ணையில் இருந்து நல்ல வருமானம் கிடைத்தது. இன்று எல்லாம் இழந்து நிற்கிறோம்.” என்கிறார் நசீம். என்ன நடந்தது?
”முட்டையிடும் கோழி ஒன்றுக்கு, நாளொன்றுக்கு 110 கிராம் தீன் வழங்க வேண்டும். 50 கிலோகிராம் எடைகொண்ட கோழித்தீன் ‘பேக்’ (Bag) ஒன்று கொரோனாவுக்கு முன் 3400 ரூபாவாக இருந்தது. கொரோனா காலத்தில் அதன் விலை 4400 ரூபாவாக உயர்ந்தது. இந்த சடுதியான அதிகரிப்பு உற்பத்தி செலவீனங்களை அதிகரித்தது. ஆனால் அதற்கு ஏற்ற வகையில் முட்டைகளை எம்மால் விற்க முடியவில்லை.” என ஆதங்கப்பட்டார்.இப்போது அங்கு கோழிகள் எவையுமில்லை. வெறும் கூடுகளும், கோழி வளர்ப்புக்கான உபகரணங்களுமே எஞ்சியுள்ளன. இந்த கொரோனா பரவலின் பின்னர் அந்தப் பிராந்தியத்தில் இப்படி பல கோழிப் பண்ணைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், பெருந்தொகைப் பணத்தை முதலீடு செய்தோரும், அங்கு வேலை செய்தவர்களும் தத்தமது தொழில்களையும் வருமானங்களையம் இழந்துள்ளனர். நசீமின் பண்ணையில் அங்கு மாதச் சம்பளத்துக்கு பணியாற்றி வந்த 4 பேர், தொழில் இழந்துள்ளனர்.
“கோழிப் பண்ணையை நடத்துவதில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் ரூபா நஷ்டத்தை நாம் எதிர்கொண்டோம். அதனால் பண்ணையை மூடுவதற்கு நாம் தீர்மானித்தபோது எம்மிடமிருந்த கோழிகளை எப்படியாவது உடனடியாக விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கோழி இறைச்சிக் கடை உரிமையாளர்களும் மிக அடிமட்ட விலைக்கே எம்மிடமிருந்த கோழிகளை கொள்வனவு செய்தார்கள். இதன்போதும் எமக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டது” என்றார் நசீம்.
கொரோனாவுக்குப் பின்னர் நஷ்டத்தில் இயங்கும் பண்ணைகள்
அஸ்ரப் நகர் பகுதியில் கோழிப் பண்ணை நடத்தி வருகின்றவர்களில் மற்றொருவர் எம்.எச்.எம். மனாப். சுமார் 50 லட்சம் ரூபா முதலீட்டில் 2ஆயிரம் முட்டைக் கோழிகளை தனது பண்ணையில் பராமரித்து வருகின்றார். ஆனாலும் அவரும் பிரச்சினையில் தான் உள்ளார்.
”இந்த 2 ஆயிரம் கோழிகளையும் பராமரிப்பதற்கு நாளொன்றுக்கு ஆகக்குறைந்தது 21 ஆயிரம் ரூபாவை செலவிட வேண்டியுள்ளது. முட்டை விற்பனையில் அதை ஈடுசெய்ய முடியாதுள்ளமைதான் நிலைமை. அரசுதான் முட்டைக்கான விலையை நிர்ணயிக்கிறது. ஆகக்குறைந்தது 55 கிராம் எடையுள்ள முட்டைகளைத்தான் நிர்ணய விலைக்கு விற்க முடியும். சாதாரணமாக ஒரு கோழி 4 ஆவது மாதத்தில்தான் முட்டையிடத் தொடங்கும். அந்தக் கால கட்டத்தில் 55 கிராமுக்கு குறைந்த எடையுடைய முட்டைகளையே அதிகளவில் இடுகின்றன. இதனால் அரசு நிர்ணயித்த விலைக்கு எம்மால் எமது முட்டைகளைக் கொடுக்க முடியாதுள்ளது. ஒவ்வொரு கோழியும் சாதாரணமாக 18 மாதங்கள் தொடர்ச்சியாக முட்டையிடுவதினால் போக போகத்தான் அந்த 55 கிராம் வரும். அதுவரை நாம் என்ன செய்வது…” என மனாப் விரக்திப்பட்டார்.
அவர்களிடம் இருக்கும் 2 ஆயிரம் கோழிகளிடமிருந்தும் சராசரியாக கிடைக்கும் 1700 முட்டைகளில் சிறிய முட்டைகள் மற்றும் சேதமடைந்த முட்டைகள் என கழிக்கப்பட்டபின் உள்ள முட்டைகளைத்தான் நிர்ணய விலைக்கு விற்க முடிவதாக கூறுகிறார்.
‘முன்னர் முட்டையொன்றினை 19 ரூபா வரையில் விற்க முடிந்தது. மே 26 ஆம் திகதி பண்ணையாளர்களின் முட்டைக்கான விலை 14 ரூபாவாக உள்ளது. ஒருமுறை முட்டைக்கான நிர்ணய விலையாக 10 ரூபாவைக்கூட அரசு நிர்ணயித்தது. உண்மையில் கோழி வளர்ப்பின் போது அவற்றுக்கு தீன், பூச்சி மருந்து, விட்டமின்கள் ஆகியவற்றினை வழங்க வேண்டியுள்ளதோடு, அவற்றுக்கான நோய் பராமரிப்பினையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றுக்கான செலவுகள் காலத்துக் காலம் அதிகரிப்பது வழமைதான். ஆனால் கொரோனாவினால் ஏற்பட்ட விலை உயர்வு மிக அதிகமானது. எமது முட்டை விற்பனையில் வரும் வருமானம், அவற்றுக்கான உற்பத்திச் செலவைக் கூட ஈடுகட்ட போதுமானதாக இல்லை” என வருத்தம் தெரிவித்தார் மனாப்.
அத்துடன் அதிகபட்சமாக இரண்டு வாரங்களுக்கே முட்டைகளை களஞ்சியப்படுத்தி வைக்க முடியும். இந்த நிலையில் கொரோனாவுக்காக நீண்ட கால ஊரடங்கு மற்றும் பயணத் தடை விதிக்கப்படுகின்ற போது, முட்டைகளை சந்தைப்படுத்துவதில் பாரிய நெருக்கடிகள் உள்ளன. இவற்றையெல்லாம் தாண்டித்தான் மனாப் தொடர்ந்தும் தனது தொழிலை செய்துவருகிறார். ஆனாலும் தொடர்ந்து நிலைமை இப்படியே இருந்தால் திடீரென்று தானும் இத்தொழிலை விட்டுவிட நேரிடும் என்றும் கூறுகிறார்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தமது பதிவின்படி 1000க்கு மேற்பட்ட முட்டைக் கோழிகளைக் கொண்ட பெரிய பண்ணைகள் 18 உள்ளன என்று, அட்டாளைச்சேனை கால்நடை வைத்தியசாலை பொறுப்பதிகாரி டொக்டர் எச். தஹானா தெரிவிக்கின்றார். அதேபோன்று 1000க்கு குறைந்த முட்டைக் கோழிகளைக் கொண்ட பண்ணைகள் 32 உள்ளன என்றும் அவர் கூறினார்.
‘கோழிப் பண்ணைகளை – கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்தல் வேண்டும். அவ்வாறு பதிவு செய்யும் பண்ணையாளர்களுக்கு ‘கோழிப் பண்ணைகள் பதிவு செய்யும் சான்றிதழ்’ ஒன்றினை நாம் வழங்குகின்றோம். அந்தச் சான்றிதழை வைத்திருக்கும் பண்ணையாளர்களுக்கு இலவச தடுப்பு மருந்துகள் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகின்றோம்” என்றும் டொக்டர் தஹானா தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள கோழிப் பண்ணைகளிலிருந்து நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான முட்டைகள் கிடைக்கின்றன. ஆனாலும் இந்தப் பண்ணைகள் அனைத்தும் நஷ்டத்திலேயே இயங்குவதாக, அதன் உரிமையாளர்களில் பலர் கூறுகின்றனர். இந்தப் பண்ணையாளர்களில் சிலர் தமது பண்ணைகளை மூடி விட்டனர். அதனால் அங்கு வேலை செய்து வந்த பலர் தொழில் இழந்துள்ளனர்.
கோழித்தீன் உற்பத்தியாளர்கள் தரப்பு சொல்வது என்ன?
கோழித் தீன் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உள்ளீட்டுப் பொருட்களுக்கு விலை அதிகரித்தமையின் காரணமாகவே, கோழித் தீனுக்கான விலையினையும் அதிகரிக்க வேண்டியேற்பட்டதாகத் தெரிவிக்கின்றார் கோழித்தீன் உற்பத்தி நிறுவனமொன்றில் பொது முகாமையாளராகப் பணியாற்றும் அசோக ரத்நாயக்க.
“கோழித் தீன் உற்பத்திக்கான பிரதான உள்ளீட்டுப் பொருட்களில் ஒன்றான சோளம் ஒரு கிலோவை உள்நாட்டில் 50 தொடக்கம் 60 ரூபாய் வரையிலேயே முன்னர் பெற்று வந்தோம். தற்போது சோளம் ஒரு கிலோவுக்கான விலை 90 ரூபாவாக அதிகரித்துள்ளது. இடையிலுள்ள வியாபாரிகளாலேயே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தீனுக்கான விலையை அதிகரிக்க வேண்டியேற்பட்டுள்ளது” என அசோக ரத்நாயக்க கூறுகிறார். அத்தோடு தீன் உற்பத்திக்கான மற்றொரு உள்ளீட்டுப் பொருளான தவிட்டுக்கும் 40 தொடக்கம் 50 வீதம் வரையில் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உண்மையில் நடந்தது என்ன?
இலங்கை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கையின்படி முட்டைக்கோழிகள் ஆயிரத்திற்கும் மேல் வளர்க்கும் பண்ணைகள் அதிகம் உள்ள குருநாகல், புத்தளம், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களுடன் அம்பாறையும் ஒன்று. இந்த மாவட்டங்களில் 2018 இல் இருந்து 2019 களில் மிகவும் வளர்ச்சியடைந்த தொழில் துறைகளில் இதுவும் ஒன்று. (http://www.statistics.gov.lk/Agriculture/StaticalInformation/rubb7) இலங்கையில் கோழி இறைச்சி முட்டை என்பனவற்றின் தேவையை உள்ளுர் உற்பத்திகள் மூலம் நிறைவுசெய்யக்கூடியதாக இருந்தது. சில வெளிநாட்டினரின் தேவைக்காகவும் விமான போக்குவரத்தின் உணவிற்காகவும் சிறிதளவு இறக்குமதி செய்யப்பட்டது என குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில் 2019இல் கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் வெளியீட்டில், இலங்கையில் 2019 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 64 சதவீதத்தை கோழிப் பண்ணை தொழில் மூலமே பெற முடிந்ததாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு மிகத் துரிதமாக வளர்ந்து வந்த ஒரு தொழில் கோழிப் பண்ணைத் தொழில், (http://www.daph.gov.lk/web/images/content_image/news_bulletins/poultry_industry_monthly_report/2020/PoultrySectorForecast_2020_colour.pdf) 2019ற்கு பின்னர் சரியத் தொடங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அதற்கு காரணம் ஈஸ்ரர் குண்டுதாக்குதலும் கொரோனா பரவுகையுமாகும். ஏனெனில் இந்த இரண்டு காரணங்களாலும் உல்லாசப்பயணத்துறை பெரு வீழ்ச்சியுற்றது. உல்லாச விடுதிகளும் உணவு விடுதிகளும் முற்றுமுழுதாக இயங்காததால் கோழி, முட்டை போன்றவற்றின் பெரு நுகர்வு உள்ளுரில் தடைப்பட்டது. இந்த நிலையில் கோழிப்பண்ணைத் தொழில் பெரும் சவாலை எதிர் கொண்டுள்ளது.
”தீன் உற்பத்திக்கான மற்றைய உள்ளீடுகளான சோயா, ‘பாம்’ எண்ணெய் மற்றும் மருந்து ஆகிவற்றினை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கின்றோம். டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை காரணமாக, அவற்றை நாம் இறக்குமதி செய்யும் போது, முன்னரை விடவும் 23 வீதம் அதிக விலையைச் செலுத்த நேரிடுகிறது” என்கிறார் கோழித்தீன் உற்பத்தி நிறுவனமொன்றில் பொது முகாமையாளராகப் பணியாற்றும் அசோக ரத்நாயக்க.
உள்ளுர் நுகர்வின் பெரும் வீழ்ச்சி, பல தொழில்களைப் பாதித்திருக்கும் இந்த காலத்தில், இருப்பதை சந்தைப்படுத்த முடியாத தொழில் முனைவோரும், குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களைப் பெறமுடியாத நுகர்வோரும் தனிநபர்களாக பொருளாதார சுமைகளையே தாங்கி நிற்கின்றனர்.
කොරෝනා තර්ජනය සහ කුකුළු ගොවිපළවල් වැසීයාම
The Burden Of Corona & Closing Down Poultry Farms