கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கான சில வினாக்கள் – முதலாம் பகுதி

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 1997 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதாகும். அதற்கான அதிகாரங்கள் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் 21 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருக்கின்றது. சட்டத்தில் சொல்லப்பட்டதற்கமைவாக சர்வதேச தராதரத்திற்கமைய இலங்கையில் மனித உரிமைகளின் தரத்தை மேம்படுத்துவது பிரதான குறிக்கோளாகும். இந்நாட்டின் மனித உரிமைகள் தொடர்பான கலந்துரையாடலின் பிரதான பேசு பொருளாக அமைந்திருப்பதும் இந்த குறிக்கோள் பற்றியதாகும்.

 

மனித உரிமைகள் ஆணைக் குழுவானது கடந்த மூன்று தசாப்த காலப்பகுதிக்குள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சர்வதேச நாடுகளின் பாராட்டுக்கும் சில சந்தர்ப்பங்களில் கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளாகி வந்திருக்கின்றது. குறிப்பாக 30 வருட கால யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் ( அதன் இறுதிக் கட்டத்தில்) மனித உரிமைகள் ஆணைக்குழு பரந்தளவில் ஈடுபட்டு யுத்த பிரதேசங்களில் வாழும் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக முயற்சிகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறே 2010 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியல் அமைப்பிற்கான 18 ஆவது திருத்தத்தின் மூலம்   ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் நடைமுறையானது சுயாதீனமானதாக இல்லை என்ற விடயம் வரை பிரச்சினையான சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. அரசியல் அமைப்பிற்கான 18 ஆவது திருத்தம் மூலம் பாராளுமன்ற பேரவைக்கான பிரதிநிதிகளை நியமிக்கும் பணியானது ஜனாதிபதியின் நேரடியான பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதன் விளைவாக சர்வதேச மனித உரிமைகள் பற்றிய தரப்படுத்தலில் இலங்கையானது “டி” தரம் வரையில் வீழ்ச்சி கண்டது. 19 ஆவது திருத்தத்தில் பாராளுமன்ற சபைக்கு பதிலாக அரசியல் அமைப்பு பேரவை ஏற்படுத்தப்பட்டது. அதன் ஊடாக ஆணையாளர்களை நியமிக்கும் நடைமுறை சுயாதீனமானதாக மாறியதோடு 18 மூலம் இந்த நியமனங்களை செய்யும் வகையில் ஜனாதிபதியின் கைகளில் இருந்த அதிகாரம் இல்லாதொழிக்கப்பட்டது. அதன்படி அரசியல் அமைப்பு சபைக்கு பொறுத்தமான ஆணையாளர்களை நியமிக்கும் அதிகாரம் அரசியல் அமைப்பு பேரவையிடம் ஒப்படைக்கப்பட்டது. 19 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆமைணக்குழுவுக்கு ஆணையாளரை நியமிக்கும் முறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக 2017 ஆம் அண்டு இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பான சர்வதேச தரப்படுத்தலுக்கமைய இலங்கை மீண்டும் “ஏ” தரத்திற்கு உட்படுத்தப்பட்டது.. அரசியல் அமைப்பிற்கான 19 ஆவது திருத்தம், இந்த திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக முன்னின்று ஒத்துழைத்த தரப்பினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அதன் பிரதிநிதியாக செயற்பட்ட பேராசிரியர் தீபிகா உடகம ஆகியோருக்கும் அதன் கௌரவம் உரித்தானதாக அமைகின்றது.

 

20 ஆவது திருத்தத்தின் நிறைவேற்றத்துடன் 19 ஆவது திருத்தம் செல்லுபடியற்றதாகி உள்ள நிலையில் 18 ஆவது திருத்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பாக இருந்த நிலை 20 இன் பின்னர் மீண்டும் ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக அரசியல் அமைப்பு பேரவைக்கு பதிலாக மீண்டும் ஒரு முறை பாராளுமன்ற சபை ஏற்படுத்தப்பட்டது. அதன் மறைமுகமான அர்த்தமாக அமைவது 19 ஆவது திருத்தத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டிருந்த ஜனநாயக அடிப்படையிலான சுயாதீனமான செயற்பாட்டிற்கு மீண்டும் ஒரு முறை ஜனாதிபதியின் நேரடி தலையீடு ஏற்படும் நிலை உருவாகி இருக்கின்றது. மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கும் அதனால் பலமான அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. இத்தகைய வேறுபாடானது மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கின்றது. அத்துடன் நியமனங்கள் தொடர்பாக பொறுத்தமற்ற நிலைமையை வெளிப்படுத்துவதாக அமைகின்றது.

 

20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு நியமனம் செய்வதற்காக புதிதாக ஐந்து ஆணையாளர்களின் பெயர்களை ஜனாதிபதி சிபாரிசு செய்து பாராளுமன்ற சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. அதன் தலைவராக பேராசியர் ஜகத் பாலசூரியவையும் ஏனைய உறுப்பினர்களாக விஜித நாணயக்கார, பேராசிரியர் சந்தன உடவத்த, ஹர்ஷ நவரத்ன மற்றும் குமாரி பலல்ல ஆகியோரே ஜனாதிபதியால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள ஏனைய உறுப்பினர்களாவர். இந்த பெயர்களை பாராளுமன்ற சபைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாவறு சிபாரிசு செய்யப்பட்டுள்ள பெயர்களில் ஒன்றையேனும் நீக்குவதற்கு பாராளுமன்ற சபைக்கு அதிகாரம் இல்லாததால் ஜனாதிபதியின் சிபாரிசு அப்படியே நிறைவேற்றப்படும் நிலை காணப்படுகின்றது. இவ்வாறாக ஜனாதிபதியால் செய்யப்பட்டுள்ள சிபாரிசானது இந்த ஆணைக்குழுவின் இதுவரையில் பாதுகாக்கப்பட்டு வந்த நடுநிலையான சுயாதீன தன்மையை தொடர்ந்து பாதுகாப்பதற்கு எந்தளவிற்கு கைகொடுக்கும் என்பது தொடர்பாக கேள்வி எழுந்திருக்கின்றது 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts